தீவிரவாதியாக எந்தவொரு இந்துவும் இருக்க முடியாது - கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதன்கிழமை, 15 மே 2019      இந்தியா
pm modi talk 2019 04 10

புது டெல்லி : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

கடும் கண்டனம்...

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதித்ததில்லை...

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்து பயங்கரவாதி என்ற பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு தனிநபரையும் காயப்படுத்துவதில்லை. அது போல யாரையும் கொலை செய்வதையும் இந்து மதம் அனுமதித்ததில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. பயங்கரவாதியாக ஒருவர் இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது.  இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேட்டியில் தெரிவித்தார்.

ஆதரிப்பது இல்லை...

இதற்கிடையே தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை பயங்கரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் கூறியது...

இதைத் தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, பயங்கரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து