நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      இந்தியா
Arvind Kejriwal 2020 07 02

டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை முதல்வர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார்.

தலைநகர் டெல்லியில் கொரோன வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தந்ததாலும், இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்ததாலும், டெல்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த வங்கி ஐ.எல்.பி.எஸ். ஆஸ்பத்திரியில் அமைக்கப்படுவதாகவும், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த நோயாளியும் இந்த வங்கியில் இருந்து பிளாஸ்மாவை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிளாஸ்மா வங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் கெஜ்ரிவால் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பிளாஸ்மா தானம் செய்ய தகுதி வாய்ந்தவர்கள், பிளாஸ்மா தானம் செய்ய விரும்பினால், நீங்கள் எங்களை 1031 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது 8800007722 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பலாம். டாக்டர்கள் உங்களை தொடர்பு கொண்டு பேசி, உங்கள் தகுதியை உறுதிப்படுத்துவதுடன், பிளாஸ்மா தானம் செய்வது குறித்த தகவலையும் தருவார்கள்.  கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். உடல் எடை 50 கிலோவுக்கு அதிகம் இருக்க வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து