போபால் : மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் மொகாஸ் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. விசாரணையில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி ராம் என அழைக்கப்பட்ட யானை உயிரிழந்தது தெரிய வந்தது.
இது நடந்து சில நாட்களுக்கு பின்னர் நேற்று பீஜதண்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த 2 பேர் காட்டு யானையால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர். இது பழிவாங்கும் செயல் என வன அதிகாரிகள் கூறுகின்றனர்.
பைகா பழங்குடியினரான 2 பேரும், உயிரிழந்த யானையின் சடலத்திற்கு 48 கி.மீ. தொலைவில் பல்ராம் என அறியப்படும் மற்றொரு யானையால் தாக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் பகத் சிங் பைகா (வயது 48), ராஜ்குமார் (வயது 54) என தெரிய வந்துள்ளது. இதில் ஒருவரை பின்புறம் இருந்து பல்ராம் குத்தியுள்ளது. மற்றொரு நபரை தூக்கி மேல்நோக்கி வீசியுள்ளது. இந்த சம்பவத்தில் சிகிச்சைக்கு பின் 2 பேரும் ஆபத்தான கட்டத்தில் இருந்து கடந்து விட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு ராம் மற்றும் சக யானையான பல்ராம் புலம்பெயர்ந்து வந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் சுற்றி திரிந்துள்ளன. இந்நிலையிலேயே ராம் மின்வேலியில் சிக்கி உயிரிழந்து உள்ளது.
பல்ராம் யானை வரும்பொழுது இருவரும் பண்ணையில் வேலையில் இருந்துள்ளனர். பல்ராம் காட்டு யானையை பிடிக்க கர்நாடகாவில் இருந்து நிபுணர்களும், கும்கி யானைகளும் வரவுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக யானைகள் புலம்பெயர்ந்து மத்திய பிரதேசத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது என அதிகாரிகள் கூறினர்.
தனது தோழன் மரணத்திற்கு பழி வாங்கும் வகையில் சக யானை ஆவேசத்துடன் இருவரை தாக்கியது அந்த பகுதியில் உள்ளவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.