முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் ஓ.பி.எஸ்.அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரூ. 6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.  .

தமிழக சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,  நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பஸ்கள் மின்சார பஸ்களாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ. 1,580 கோடியில் 2,200 பி.எஸ்-6 பஸ்களும், 500 மின்சார பஸ்களும் கொள்முதல் செய்யப்படும்.  இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2021- 22-ம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில், மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் தனது வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.  இத்துடன் இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஆதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  

விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக முதல்வர்  அறிவித்தார்.  இதனால் 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய 12,110.75 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட முதல்வர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு காப்பீட்டுக் கட்டண மானியத்தை கூடுதல் சுமையாக ஏற்றுக் கொண்டு, 80:20 எனும் பகிர்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இணைக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு போதுமான இடர்க்காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 747.15 கோடி ரூபாயை உயர்த்தி, 2020-21-ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் 812.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மேலும் உயர்த்தி, 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு -செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து