முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்: செங்கல்பட்டில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுன்ட்டர்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் நேற்று செங்கல்பட்டில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (வயது 30). நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ்நிலையம் எதிரே கார்த்திக் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

உருதெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பகுதி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், காய்கறி சந்தை என பரபரப்பாக உள்ள பகுதி ஆகும்.

செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ் (22). காய்கறி வியாபாரி. இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மகேஷ் தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதே கும்பல் வீட்டுக்குள் புகுந்து மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

அடுத்தடுத்து இரட்டை கொலை சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் நேற்று காலை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து உத்தரமேரூர் பகுதியில் கைதானவர்களை அழைத்து வந்தனர். அப்போது தப்ப முயன்ற தினேஷ், மொய்தீன் ஆகியோர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும், தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் தினேஷ், மொய்தீன் ஆகிய 2 பேர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீசார் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து