முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 31, 1-ம் தேதிகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

வருகிற 31, 1-ம் தேதிகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் தரிசனம் செய்யும் சசிகலா திருப்பூர் வழியாக கோவை செல்கிறார்.

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மிக பயணம் மேற்கொண்ட சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். அதன்படி வருகிற 31-ந்தேதி பங்குனி அமாவாசையில் கோவில்களில் தரிசித்த படி மீண்டும் ஆன்மிக பயணத்தை தொடங்கும் அவர் கட்சியினரை சந்திக்கிறார்.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் சசிகலாவை சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் மூலம் பிற நிர்வாகிகளுக்கும் சசிகலா தரப்பில் தூது விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரியில் 31-ந்தேதி பயணத்தை தொடங்கும் அவர் காட்டு வீர ஆஞ்சநேயர், தேன்கனிக்கோட்டை கால பைரவர் கோவில்களில் தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் வழிபடுகிறார்.

தொடர்ந்து அன்று இரவு சேலத்தில் தங்குகிறார். அப்போது தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார். ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் தரிசனம் செய்யும் அவர் திருப்பூர் வழியாக கோவை செல்கிறார். அங்கு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் கொங்கு மண்டல பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த நிகழ்வுகளில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் சசிகலாவை சந்திப்பார்கள் என்று கூறப்படுவதால் அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!