முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6-ம் ஆண்டு நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
Thoothukudi 2024-05-22

Source: provided

தூத்துக்குடி :  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அமைச்சர்  கீதாஜீவன் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீசார்  நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், லயன்ஸ்டவுன் உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்சிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து