தேர்தல் கூட்டணி குறித்து `பேரம் பேசும் சக்தி' பா.ம.க.விடம் குறைந்துவிட்டதா?

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

சென்னை, பிப்.19-

தேர்தல் கூட்டணி குறித்து `பேரம் பேசும் சக்தி' பா.ம.க.விடம் குறைந்துவிட்டதா? ராமதாஸ் மழுப்பல்.

ஏற்கனவே பத்திரிக்கையாளர்களிடம், 45 தொகுதி ஒதுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம் என்று கூறுனீர்களே? தற்போது குறைவாக தி.மு.க.விடம் தொகுதிகள் பெற்றுள்ளீர்களே? பா.ம.வின் பேரம் பேசும் சக்தி தற்போது குறைந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியதற்கு டாக்டர் ராமதாஸ் மழுப்பலாக பதிலளித்தார்.

இதுகுறித்த விபரம் வருமாறு:-

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் ச.ராமதாசு -கருணாநிதி நேற்று சந்தித்து பேசினர். பின்னர் அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி விபரம் வருமாறு:-

டெல்லிக்கு நான் சென்றிருந்தபோது, சோனியாகாந்தியை சந்தித்து வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியோடு ஒப்பந்தம் ஏற்பட்டு தி.மு.க.வுடன் இணைந்து இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறினார்.

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி: 2 மணி நேரமாக முதல்வரோடு  பேசியிருக்கிறீர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

பதில்: எனது பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வந்தேன். அதோடு  தேர்தல் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வந்தேன். மகிழ்ச்சியோடு முதல்வரை சந்திக்க சென்றேன் இப்போது மகிழ்ச்சியோடு உங்களை சந்திக்கிறேன்.

கேள்வி: எத்தனை சீட் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

பதில்: 31 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்ப்பட்டுள்ளன. அதோடு ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

பதில்: எந்தெந்த தொகுதிகள் என்பதை தேர்தல் குழுக்கள் முடிவு செய்யும்.

கேள்வி: சோனியா காந்தி அம்மையாரை எப்போது சந்திப்பீர்கள்?

பதில்: முன்னாள் மத்திய அமைச்சர்  அன்புமணி இரண்டு நாட்களுக்கு முன்பு சோனியாவை சந்தித்திருக்கிறார்.

கேள்வி: திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த நீங்கள், தேர்தல் உடன்பாட்டை எதிர்பார்த்து வந்தீர்களா?

பதில்: எதிர்பார்த்துதான் வந்தேன்.

கேள்வி: 45 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி வைப்போம் என்று சொன்னீர்களே?

பதில்: தேர்தலுக்கு முன்பு ஊடக நண்பர்களை சந்திக்கும்போது நாம் எண்ணிக்கையை அதிகப்படுத்தித்தான் சொல்ல வேண்டும்.

கேள்வி: எதிர்க்கட்சிகள், தி.மு.க. மற்றும் அதனோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று சொல்லியருக்கிறார்களே?

பதில்: வருகிற சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்னும் பல கட்சிகள் சேரவிருக்கின்றனர். இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப்பெறும்.

கேள்வி: கடந்த முறை அள்ளியும் கொடுக்கவில்லை. கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். இந்த முறை அதே அளவிற்குத்தான் சீட் பெற்றிருக்கிறீர்களே?

பதில்: நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்.

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பார்கெயினிங் பவர் குறைந்து இருக்கிறதா?

பதில்: குறையவும் இல்லை, கூடவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: