முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை சம்பவம்: டாக்டர் ராமதாசிடம் சி.பி.ஐ. விசாரணை

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.13 -​ திண்டிவனத்தில் நடைபெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினரின் கொலை சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் சி.பி.ஐ. போலீசார் 5 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதுகுறித்த விபரம் வருமாறு:- 2006​ ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ம.க.வினர் அ.தி.மு.க.வினர் மீது திண்டிவனத்தில் தாக்குதல் நடத்தினர். 8.5.2006-​ல் நடந்த இந்த சம்பவத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் இருந்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.   உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று சி.வி.சண்முகம் தரப்பில் கூறப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். உண்மை குற்றவாளிகள் மீது வழக்கு தொடரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது.   சி.பி.ஐ. நடத்திய விசாரணையையடுத்து டாக்டர் ராமதாசின் தம்பி சீனிவாசன், பா.ம.க. நிர்வாகி என்.எம்.கருணாநிதி உள்பட 9 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்தது. சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் பற்றியும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அ.தி.மு.க. தரப்பினரிடமும் விசாரணை நடந்தது. 

இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் இருக்கும் சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. நேற்று காலை 11.30 மணி முதல் 4.30 மணி வரை 5 மணிநேரம் டாக்டர் ராமதாசிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது சி.வி.சண்முகம் உறவினர் கொலை தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்டனர். டாக்டர் ராமதாசின் தனி உதவியாளர் நடராஜனிடமும் விசாரணை நடந்தது. டாக்டர் ராமதாசின் மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணியிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கொலை வழக்கு தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!