முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்: ஜெயலலிதா

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.14 - கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டதால் அ.தி.மு.க.  கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று ஜெயலலிதா கூறினார்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று காலை போயஸ் கார்டன் அருகே உள்ள ஸ்டெல்லாமேரி கல்லூரி வாக்குச்சாவடியில் காலை 9.10 மணிக்கு ஓட்டு போட்டார்.   அவருடன் சசிகலாவும் வந்து ஓட்டு போட்டார். ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த ஜெயலலிதாவை கியூவில் நின்ற ராஜலட்சுமி என்ற பெண் கைகொடுத்து ஆல் த பெஸ்ட் என்று வாழ்த்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது ஜெயலலிதா கூறியதாவது:-

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூ.300 வழங்கப் பட வேண்டும். ஆனால் மாநில அரசு முழு தொகையையும் கொடுக்க மறுப்பதால் அவர்கள் கோபத்துடன் உள்ளனர். எனக்கு கிடைத்த தகவல்படி முதல்​ அமைச்சரின் ஆணையின் பேரில் தலைமை செயலாளர் பாதுகாப்பு படையினருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறுப்பதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார், துணை ராணுவ படையினர் போன்ற பலர் இங்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் சும்மாதான் நிற்கிறார்கள். இவர்களுக்கு ரூ.300 பணம் வழங்குவது தேவை இல்லாதது என்று தலைமை செயலாளர் முடிவு எடுத்துள்ளார். இந்த செயல் பாதுகாப்பு படையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடிய அளவில் மனவேதனையில் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.300 தருவது இவர்களுக்கு சாத்தியம் இல்லை என்று கூறி இருப்பதை யாரும் ஏற்க முடியாது. எனவே நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.   இதனால் சட்டம்​ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது. இதை தேர்தல் கமிஷன் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த நேரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் ரவுடிகளை அனுப்பி வாக்காளர்களை வாக்குச்சாவடியில் இருந்து பயமுறுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டு விடும். இதனால் கள்ள ஓட்டு போடும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதுசம்பந்தமாக தனியாக அறிக்கை விட இப்போது நேரம் இல்லாத காரணத்தால் இந்த செய்தி மூலம் தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை செயலாளர் போலீசாருக்கு தினப்படி பணம் கொடுக்க முடியாது என சட்டப்படி கூற முடியாது. 

கேள்வி:​ இந்த தேர்தலில் ஏகப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வருகிறதே, பணப்பட்டுவாடா மூலம் தேர்தல் முடிவு வேறு மாதிரி இருக்கும் என நினைக்கிறீர்களா? 

பதில்:​ தமிழ்நாட்டில் இதுவரை ரூ.50 கோடி வரை பணம் பிடிபட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் ஒட்டு மொத்த தொகையில் ஒருதுளி மட்டுமே. ஆனாலும் வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியினர் இப்படி வாரி இறைத்தாலும் மக்கள் இந்த முறை இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என உறுதியாக உள்ளனர். கருணாநிதி அரசு வெளியே போக வேண்டும், கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.   

கேள்வி:​ ஸ்பெக்ட்ரம் ஊழலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? 

பதில்:​ கண்டிப்பாக எதிரொலிக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டும் அல்ல, அது வெறும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடிதான். அதற்கும் மேலும் தமிழ்நாட்டில் மணல்குவாரி மூலம் ரூ.50 ஆயிரம் கோடி, கிராணைட் குவாரி மூலம் ரூ.80 ஆயிரம் கோடி என இப்படி பல ஊழல்கள் இருக்கிறது. இதை எல்லாம் பார்த்து மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு வந்துள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ஊழல் எல்லா காலத்திலும், எல்லா நாட்டிலும் இருந்துள்ளது. ஆனால் இப்போது நாம் தி.மு.க. ஆட்சியில் பார்த்த ஊழல் இதுவரை கண்டறியாதது.   

கேள்வி:​ தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:​ எங்களுக்கு ஒரு தெளிவான மெஜாரிட்டி, தனி மெஜாரிட்டி வரும் அளவுக்கு தீர்ப்பு கிடைக்கும். எங்களது கூட்டணி கட்சிகளுக்கும் அமோக வெற்றி கிடைக்கும். 

கேள்வி:​ 2006 தேர்தலில் உங்களுக்கு அதிக சதவீத ஓட்டு கிடைத்தது. ஆனால் குறைந்த தொகுதிகளில் தானே வெற்றி பெற முடிந்தது? 

பதில்:​ இந்த தேர்தலில் அப்படி இருக்காது. மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியை தரப் போகிறார்கள். அதிலும் தெளிவான அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

கேள்வி:​ அப்படியானால் எத்தனை இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? 

பதில்:​ அதற்கு மே 13 வரை காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டி முடித்து ஜெயலலிதா காரில், ஏறியபோது நிருபர்கள் அவரிடம் நீnullங்கள் ஓட்டு போட்டதற்கான மை வைத்த விரலை காண்பியுங்கள் என்றனர். அதற்கு ஜெயலலிதா இந்த இடத்தில் விரலை காட்டக்கூடாது. nullநீங்கள் கேட்டதற்காக விரலை காட்டினால் என்மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு போட்டு விடுவார்கள் என்று ஜெயலலிதா கூறினார். 

ஜெயலலிதாவுடன் ஆயிரம் விளக்கு அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரும் வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்