கர்நாடக தேர்தல்: பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை வந்து விட்டாலே வெயில் மண்டையை பிளக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் பங்குனி ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரத்தை மக்களால் தாங்க முடியவில்லை. சென்னை போன்ற நகரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிக்கிறார்கள். மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும் அதே நிலைதான் நீடிக்கிறது. 

தமிழகத்தில் வெயிலால் அனல் பறக்கிறது என்றால் கர்நாடக மாநிலத்திலோ தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அனல் பறக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டபடியால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கின்றன. 1992 ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 பேர் கர்நாடக முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். 

இவர்களில் இப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நீங்கலாக 8 பேர் இதற்கு முன்பு முதல்வர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் ஜே.எச். பாட்டீல் காலமாகி விட்டார். மற்ற 7 முன்னாள் முதல்வர்களும் தேர்தல் களத்தில் இயங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர். 

மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டனர். குமாரசாமி ராமநகரம் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. சதானந்த கவுடா, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல இப்போதைய முதல்வரும் ஜெகதீஷ் ஷெட்டரும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு ஓட்டு வேட்டையாடி வருகிறார். 

கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்தலில் போட்டியிடுவதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதிலும் முனைப்பு காட்டி வருகிறார். பா.ஜ.க வேட்பாளர்களை வீழ்த்த வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம். கிருஷ்ணாவும், தரம்சிங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

முன்னாள் முதல்வர்களில் மிகவும் வயதானவர் யார் என்றால் அவர்தான் எஸ்.எம். கிருஷ்ணா. அவருக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் முதல்வர்களில் இளையவர் என்றால் அவர்தான் குமாரசாமி. அவருக்கு 54 வயதாகிறது. வயதானவரான எஸ்.எம். கிருஷ்ணாவும் மற்றும் இளையவரான குமாரசாமியும் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். இப்படி பல முன்னாள் முதல்வர்கள் இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் அம்மாநிலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடக்கிறது. 

கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்து வருகிறார். மீண்டும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று இவர் மார்தட்டுகிறார். ஆனால் எடியூரப்பாவோ பா.ஜ.க வை ஆட்சிக்கு வர விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 3 இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் முதலிடத்தையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 வது இடத்தையும் பிடித்தன. ஆனால் எடியூரப்பா கட்சி படுதோல்வி அடைந்தது. எனவே சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு இதே கதிதான் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது ஒருபுறமிருக்க, இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் மோடி வரவிருக்கிறாராம். அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் பிரச்சாரத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் வந்த பிறகு இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடையும். அப்போது மேலும் அனல் பறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: