முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மாரடைப்பால் மரணம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - திரை உலகில் இசை மேதைகளாக விளங்கிய இரட்டையர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி. இவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. இதுபற்றிய விவரம் வருமாறு:-

பிரபல இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார். இந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் இறந்த செய்தி கேட்டு பொதுமக்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்,தேவா, சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, தி.மு.க. பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் என பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டி.கே.ராமமூர்த்தியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. 

டி.கே.ராமமூர்த்தி 1922-ல் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பிறந்தார். இந்து அய்யர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசாமி, தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் இசை கலைஞர்கள். அதனால் ராமமூர்த்தியும் சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருந்துள்ளது. இவர் 1950-ம் ஆண்டு தர்மாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு மகன் டாக்டர். இவர் இறந்து விட்டார். 

சிறுவயது முதல் ஆர்மோனியம், கீ போர்டு வாசித்து பயிற்சி பெற்ற ராமமூர்த்தி சென்னை வந்து எச்.எம்.வி. ஆடியோ நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு அந்நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த சரஸ்வதி என்ற இசை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கே சுப்பாராம் என்ற இசையமைப்பாளரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசித்து வந்தார். இந்த சூழலில் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் நண்பர்களானார்கள். இசையமைப்பாளர் சுப்பாராம் இறந்த பிறகு விஸ்வநாதன்- ராமமூர்த்தி சேர்ந்து இசையமைக்க தொடங்கினர். முதல் படம் `பணம்'. இப்படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திலிருந்து பட டைட்டலில் இருவர் பெயரும் சேர்த்து போடப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700 படங்களுக்கு இசையமைத்து இசையின் உச்சத்திற்கு சென்றார்கள். 

பிறகு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த `ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு இசையமைத்து விட்டு பிரிந்து விட்டனர். 

பின்னர் டி.கே.ராமமூர்த்தி தனித்து இசையமைக்க தொடங்கினார். முதல் படம் `சாதுமிரண்டால், 1966-ல் வெளிவந்தது. தொடர்ந்து ரவிச்சந்திரன் நடித்த நான், ஜெய்சங்கர் நடித்த மூன்றெழுத்து, தங்க சுரங்கம், மறக்க முடியுமா?, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, இவள் ஒரு பவுர்ணமி என 19 படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் 29 ஆண்டுகள் கழித்து  மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனுடன்  இணைந்து ராமமூர்த்தி இசையமைக்க தொடங்கினார். சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த `எங்கிருந்தோ வந்தாள்' படம் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனை விட ராமமூர்த்தி ஏழு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் குடும்பங்களும் நெருக்கமாக பழகி நட்பை வளர்த்து வந்தனர்.

இவர்களுக்கு1962-ல் எம்.கே.டி.கலா மன்றம் சார்பில் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1950-லிருந்து 70 வரை உலகில் கொடிகட்டி பறந்தார்கள். இவர்களது  இசையில் வெளிவந்த பாடல்கள் இன்றும் தேன் போல் இனிக்கும். 

சமீபத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு கார், தங்க காசுகளை பரிசாக வழங்கினார். டி.கே.ராமமூர்த்தியின் இன்னொரு சிறப்பு இதுவரை இவர் இசையிலும் சரி, பிறருடைய இசையிலும் சரி ஒரு பாடல் கூட பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago