முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரும் - சட்ட அமைச்சரும் பதவி விலக போர்க்கொடி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 27  - நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமாரிடம் அவரது விருப்பப்படி கொடுத்தோம் என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினை நேற்று எதிரொலித்தது. 

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், சி.பி.ஐ. இயக்குநரை நேரில் அழைத்து அந்த அறிக்கையைப் பெற்று படித்துப் பார்த்து திருத்தம் செய்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும், பிரதமர் மன்மோகன்சிங்கும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. 

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஆஜரான சி.பி.ஐ. வழக்கறிஞர், சட்ட அமைச்சகத்துக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசை சார்ந்த யாரிடமும் இந்த அறிக்கை பகிர்ந்து கொள்ளப்படவே இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்த மனுவிலோ, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையை சட்ட அமைச்சரிடம் அவரது விருப்பப்படி அளித்தேன். அதை பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகளும்,  நிலக்கரி அமைச்சக மூத்த அதிகாரிகளும் பார்வையிட்டனர் என்று தெள்ளத் தெளிவாக ஒப்புக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பு வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், இப்படி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வருவது என்பதெல்லாம் எப்படி ஒரு சுதந்திரமான விசாரணையாக இருக்க முடியும்? இதில் நாம் எதை எதிர்பார்க்க முடியும்? என்று வாதிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ இயக்குநர் இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் அவசர ஆலோசனை நடத்தினார். இதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகளும் இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குநர் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் இனியும் பிரதமரும் சட்ட அமைச்சரும் பதவியில் நீடிக்கக் கூடாது.. இருவரும் ராஜினாமா செய்தாக வேண்டும் என்று பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்