முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

26-ல் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 21  - தமிழகத்தில் ஆறு எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர்களுக்கு பதிலாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் வரும் 26 ம் தேதி டெல்லியில் பதவியேற்கவுள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ. இளவரசன், வா. மைத்ரேயன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசை சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி டி. ராஜா ஆகியோரின் பதவிக் காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக காலியாகும் இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு உறுதியானது. 

அதில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், வா. மைத்ரேயன், த. ரத்தினவேல் ஆகியோரும், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 24 ம் தேதி காலியாகும் அந்த ஆறு இடங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் தமிழக சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து மாநிலங்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதன்பின் ஆறு பேரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என்று பேரவை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.பி.க்களும் வரும் 26 ம் தேதி பதவியேற்க உள்ளனர். மாநிலங்களவை செயலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிகிறது. அதன் பின்பே அவர்கள் தங்களது எம்.பி. பணிகளை தொடங்க முடியும். தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த எட்டு மாதங்களிலும் மேலும் ஆறு இடங்கள் காலியாகவுள்ளன. அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி(தி.மு.க.), ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன்(காங்.), என். பாலகங்கா(அ.தி.மு.க.), டி.கே. ரங்கராஜன்(மார்க்சிஸ்ட்) ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைகிறது. இதனால் அந்த ஆறு காலியிடங்களுக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்