முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நிகழ்ச்சியில் நவாஸ் ஷெரீப் - ஜர்தாரி

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்-2 - பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் மின் உற்பத்தி திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப், முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். இது அந்நாட்டில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நவாஸ் ஷெரீப், “நாட்டில் ஒத்துழைப்பு உணர்வு, அரசியல் முதிர்ச்சி கொண்ட புதிய அரசியல் சகாப்தம் தொடங்கியுள்ளது” என்றார்.

சிந்து மாநிலத்தில் ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் முயற்சியால் இங்குள்ள தர்பாகர் மாவட்டத்தில், இங்ரோ என்ற நிறுவனம் 160 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் நிலக்கரி சுரங்கத்துடன் கூடிய அனல்மின் நிலையத்தை நிறுவியுள்ளது. இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நவாஸ் ஷெரீப், ஜர்தாரி ஆகிய இருவரும் இணைந்து, மின் உற்பத்தியை தொடங்கி வைத்தனர்.

நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும், ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் தொடக்க நாள் முதலே விரோத மனப்பான்மையுடனே செயல்பட்டு வருகின்றன. 2008ல் இரு கட்சிகளும் இணைந்து அரசு அமைத்தாலும் 6 மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக இவ்விரு தலைவர்களும் தங்கள் அரசியல் முதிர்ச்சியை காட்டும் வகையில், ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசிவந்தாலும், பொது நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்பது அரிய நிகழ்வாகும்.

மின் உற்பத்தி திட்ட தொடக்க விழாவில் பேசிய நவாஸ் ஷெரீப், “2008ல் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கடந்த ஆண்டு எங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பாகிஸ்தான் அரசியலில் இது புதிய தொடக்கம். அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்து பணியாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. ஜர்தாரியும் அவரது கட்சியும் அரசுக்கு ஒத்துழைப்பு தருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்