வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் அமைச்சர்களாக பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.10 - முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் பா.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டனர். தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களுக்கு பதவிப்பிரமானத்தைச் செய்து வைத்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த எம்.பரஞ்ஜோதியின் ராஜினாமா செய்ததையடுத்தும், சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த செல்வி ராமஜெயம் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருக்கும் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பா.வளர்மதி ஆகியோரை அமைச்சர்களாக ஆளுநர் நியமித்திருந்தார்.

பெண்கள் மற்றும் குழந்தை நலம், அகதிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு, பிச்சைக்காரர் நலம், சமூக சீர்த்திருத்தம் உட்பட சமூக நலத்துறையை பா.வளர்மதி ஏற்பார், அவர் இனி சமூக நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார் என்றும், பரஞ்ஜோதி வகித்து வந்த இந்து அறநிலையத்துறையை திருப்பூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் வகிப்பார் என்றும் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி இரண்டு புதிய அமைச்சர்கள் இருவரும் பதவியேற்பு விழா நேற்று மாலை 4.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பா.வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு  ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், டி.வி.ரமணா, செந்தில்பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, கே.வி.ராமலிங்கம், பி.தங்கமணி,  கோகுல இந்திரா, முகமதுஜான், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாதவரம் மூர்த்தி, சுந்தர்ராஜு, டி.கே.எம்.சின்னய்யா உள்பட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்ட, தெற்கு செயலாளர் செந்தமிழன், தென் சென்னை மாவட்ட வடக்கு செயலாளர் வி.பி.கலைராஜன், வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மற்றும் எம்.எல்.ஏக்கள் ராஜலட்சுமி, அசோக் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் புதிய அமைச்சர்களான பா.வளர்மதியும், எம்.எஸ்.எம்.ஆனந்தனும் உடனடியாக கோட்டைக்கு சென்று தங்கள் துறைகளில் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: