முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா குறித்த கூட்டம் நடத்தப்படும் மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப்.- 2 - ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினால்தான் தனி தெலுங்கானா குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடியும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா  மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இது தொடர்பாக இன்னும் திடமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு அக்குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையில் தெளிவான யோசனைகள் எதுவும் கூறப்படவில்லை. இந்த நிலையில் தனி தெலுங்கானா பிரச்சனை குறித்து விவாதிக்க ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆந்திர அரசியல் கட்சிகளின் கருத்துக்களை தெரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சனை தொடர்பாக சர்வ கட்சி கூட்டத்தை கூட்ட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், எம்.ஐ.எம்., தெலுங்குதேசம் ஆகிய 4 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது சர்வகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்த 4 கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். தனி தெலுங்கானா பிரச்சனை குறித்து எந்தெந்த கட்சி என்னென்ன கருதுகிறது என்பது தங்களுக்கு தெரியாது என்றும் அந்த கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினால் இதுகுறித்து சர்வ கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் கூறினார். ஆந்திர அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனை தொடர்பான தங்களது இறுதி முடிவை வெளிப்படையாக தன்னிடம் தெரிவிக்க வேண்டும்.  அப்போதுதான் சர்வகட்சி கூட்டத்தை கூட்ட முடியும். இல்லாவிட்டால் சர்வ கட்சி கூட்டத்தை கூட்ட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்