கிழக்கு உக்ரைனில் உடனடிப் போர் நிறுத்த ரஷ்யா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, செப்.03 - உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையே அதிகாரிகள் அளவிலான பேச்சு வார்த்தை பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கிளர்ச்சியாளர்கள் சார்பாக ஆந்த்ரேய் பர்கின் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள சர்வதேச உறவுகள் கல்வி மையத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே பேசிய ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் பேசும்போது, உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது:

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிடாது. அங்கு ரஷ்ய ராணுவம் ஈடுபடுத்தப்பட மாட்டாது. இந்தக் கடும் நெருக்கடியான சூழ்லுக்கு அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும். உடனடியாக, நிபந்தனையற்ற போர் நிறுத்தம் அறிவிக்கப்பட அனைத்துத் தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, ரஷ்ய மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியினரின் நலன்களைக் காக்கும் வகையில் தனி நாடு அமைக்கும் கோரிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் தனது ஆதரவைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு உக்ரைன் பகுதியை சுதந்திரம் பெற்றதாக அங்கீகாரம் பெறுவதே தங்களின் முக்கிய குறிக்கோள் என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பைச் சேர்ந்த ஆந்திரேய் பர்கின் கூறியுள்ளார். மேலும் தாற்காலிகப் போர் நிறுத்தத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் இரு தரப்பினராலும் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை திருப்பி அனுப்புவது குறித்துப் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான லுஹான்ஸ்க்கில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள உக்ரைன் ராணுவத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் தலைமையில் கடுமையான தாக்குதல் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருவதால், உக்ரைன் ராணுவத்தினர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். இப்பகுதியில் குறைந்தபட்சம் 1,600 ரஷ்ய வீரர்களும் மூத்த அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர் என அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: