முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் தேசிய வாக்காளர் தின பேரணி

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி

 

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவில்பட்டியில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

 

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் முனியசாமி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் அப்பனசாமி, கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் எட்டயபுரம் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.

 

பேரணியில், கையூட்டு பெற்று வாக்களிக்காமல் மனசாட்சிபடி வாக்களியுங்கள், ஜனநாயகத்தை காத்திடுங்கள், ஓட்டுக்கு பணம் பெற்றால் தண்டனை உள்ளிட்ட வாசகங்களை முழக்கமிட்டனர்.

 

பின்னர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி, கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை கோட்டாட்சியர் வழங்கினார்.

 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அண்மையில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கோட்டாட்சியர் வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்