முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

புதுடெல்லி, பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

5 கட்ட தேர்தல்...

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன. முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், 2வது கட்டத்தில் 66.71 சதவீதம், 3வது கட்டத்தில் 65.68 சதவீதம், 4-ம் கட்டத்தில் 69.16 சதவீதம், 5-ம் கட்டத்தில் 60.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

6-ம் கட்டமாக... 

இந்த நிலையில், 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாளை (மே 25- ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றஉ மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. முன்னதாக கடைசி நாளான நேற்று, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

வேட்பாளர்கள்...

6-ம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் டெல்லி மக்களவை தொகுதியில் மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து இன்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். வடகிழக்கு டெல்லியில் பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி எம்.பியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கின்றார்.

மேனகா காந்தி...

உத்தரப் பிரதேச மாநிலம், கல்தான்பூரில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மேற்கு வங்கம் தம்லுக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், ஹரியாணாவின் கர்னாலில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குருஷேத்ராவில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால், ஒடிசாவில் உள்ள புரியில் சம்பித் பத்ரா, சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து