முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
ஸ்நூக்கர் போட்டியில் முதன்முதலில் சாம்பியன் வென்றவர் யார்?

உலகில் முதன் முறையாக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் 1927 இல் நடைபெற்றது. முதல் சுற்று லண்டனிலும், இறுதி சுற்று  பெர்மிங்காமிலும் நடைபெற்றது. முதன் முதலில் இந்த விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ஜோ டேவிஸ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழில் முறை ஸ்நூக்கர் விளையாட்டு வீரராவர். வெற்றி பெறுபவருக்கு பரிசாக 6 பவுண்டுகள் 10 ஷில்லிங் பணம் பரிசாக அளிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் ஆகும். 

ஸ்நூக்கர் விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது தெரியுமா?

இன்றைக்கு செல்வந்தர்களின் விளையாட்டாக உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஸ்நூக்கரும் ஒன்று. ஆனால் ஸ்நூக்கர் எங்கு தோன்றியது தெரியுமா... அது இந்தியாவில்தான் தோன்றியது. பின்னர் அது ஆங்கிலேயர்களின் பில்லியர்ஸ் விளையாட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டது. இது இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள் பந்துகளை மேஜையில் வைத்து விளையாடப்படும் விளையாட்டாகும். இருந்த போதிலும் தரையில் பந்துகளை வைத்து, பிளாஸ்டிக் அல்லது மர மட்டைகளால் அவற்றை அடித்து சென்று வளையங்களுக்குள் நுழைய செய்யும் க்ரோக்கெட் என்ற விளையாட்டிலிருந்துதான் ஸ்நூக்கர் வடிவம் பெற்றது. தரையில் விளையாடுவதை போலவே வண்ண பந்துகளை மேஜை குழியில் தள்ளுவதை இது அடிப்படையாக கொண்டுள்ளது.

உலகின் மிக உயரமான உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினரை பற்றி தெரியுமா?

அதென்னங்க உலகத்திலேயே மிகவும் உயரமான குடும்பத்தினர். யார் அவர்கள்.. எங்கே வசிக்கின்றனர். பொறுங்க... பொறுங்க.. அவர்களை பற்றி சற்று பார்க்கலாம்.அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா  மாகாணத்தில் எஸ்கோ என்ற இடத்தில் வசித்து வரும் டிராப் என்பவரின் குடும்பம்தான் இந்த பெருமைக்குரியது. இந்த குடும்ப உறுப்பினர்களின் சராசரி உயரமே 203.29 செமீ அதாவது 6 அடி 8.03 அங்குலம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே சராசரியாக 6 அடிக்கு மேலே உயரம் கொண்டவர்கள்தான். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் யாராக இருந்தாலும் இவர்களை நிமிர்ந்து பார்த்து பேசியே கழுத்து வலி வந்து விடும் போலிருக்கே... குடும்ப தலைவி கிரிஸ்ஸி டிராப் லவ்ஸ் உயரம் 6 அடி 3 அங்குலம். இவர் உயரம் தான் ஆனால் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்களை விட சற்று குறைவு. இவரது கணவர் ஸ்காட் 6 அடி 8 அங்குலம். இவர்களுக்கு சாவன்னா மற்றும் மொய்லி என இரண்டு மகள்கள். இருவரில் ஒருத்தி 6 அடி 8 அங்குலம், மற்றவர் 6 அடி 6 அங்குலம். இவர்கள் வீட்டின் கடைசி வாண்டு ஆடம் டிராப். அவனது உயரம் 7 அடி 3 அங்குலம்.. அம்மாடியோவ்.. பிறகென்ன இந்த தகவல் கின்னஸூக்கு போய்.. உலகிலேயே மிகவும் உயரமான குடும்பம் என்ற பெருமையையும் அள்ளியுள்ளது. 

ஈஸ்டர் தீவில் அணிவகுத்து நிற்கும் மோவாய் சிற்பங்கள்

உலகம் முழுவதும் வரலாற்றில் கண்டறிய முடியாத ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய் சிற்பங்கள். இவை கிபி 1250 முதல் 1500 கால கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ராபா நூய் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த கல் சிற்பங்கள் சுமார் 10 மீ உயரம் கொண்டவை. சுமார் 900 சிலைகள் அணிவகுப்பாக அங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை எதற்காக நிறுவப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது. அதே போல, இத்தனை பெரிய சிலைகளை அக்காலத்தில் எவ்வாறு அந்த மக்கள் கொண்டு வந்து நிறுவினர் என்பதும் இன்று வரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்றாகவே உள்ளது.

பழங்கால கல் கோளங்கள் அல்லது கல்பந்துகள் எங்குள்ளன தெரியுமா?

பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..

களிமண் வீரர்களின் அணிவரிசை எங்குள்ளது தெரியுமா?

சீனாவில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் 1974 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் தடயம் ஒன்றை கண்டறிந்தனர். அங்கு தோண்டிய போது சுமார் 8 ஆயிரம் களிமண் வீரர்களின் அணிவகுப்பு சிலைகளாக வடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெரகோட்டா ஆர்மி என அழைக்கப்படும் இந்த இடம் சுமார 98 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. கின் வம்சத்தின் முதல் பேரரசரான கின் ஷி ஹூவாங் ஆட்சி காலத்தில் அதாவது சுமார் கிபி 246 இல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது வரை இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.