முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
கொல்கத்தா-லண்டன் பேருந்து சேவை

கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. அதுதான் அன்றைய நாளில் உலகின் மிக நீளமான பேருந்து சேவையாகவும் காணப்பட்டது. 1957 இல் தொடங்கப்பட்ட அந்த பேருந்து சேவைக்கு "ஆல்பர்ட்"  என்றும் பெயரிடப்பட்டது. இந்த பேருந்தானது இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா ஆகிய 11 நாடுகள் வழியாக  32,669 கி.மீ தூரம் பயணம் செய்து லண்டனிலிருந்து கொல்கத்தாவை அடையும்  வகையில் இயக்கப்பட்டது. அப்போது பயணக் கட்டணம் ரூ.8 ஆயிரம். 1976 வரை இந்த சேவை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவையும்  ஐரோப்பியாவை இணைக்கும் வகையில் செயல்பட்ட அந்த பேருந்து சேவை ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே...

தங்க சுரங்கம்

சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கோள்களிலிருந்து பிரிந்து உருவாகின. அப்படி உருவான ஒரு சிறிய கோளை அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளர்  மார்ச் 17, 1852இல் கண்டு பிடித்தார். இதன் சிறப்பு என்ன தெரியுமா, இது தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள், தனிமங்களால் உருவான மிகப் பெரிய கோளாகும். எனவே இதற்கு 'கோல்டுமைன் ஆஸ்டிராய்டு' என நாசா பெயரிட்டது. உண்மையிலேயே விண்வெளியில் மிதக்கும் ஒரு தங்கச் சுரங்கமான இது, நமது சூரிய மண்டல சுற்றுவட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள், தனிமங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்த விண்வெளி தங்கச் சுரங்கம் பூமியிலிருந்து சுமார் 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சுழன்றி வருகிறது.

முதல் சினிமா

இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது.   தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது.  தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

birds

தொலை தூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் வானில் கூட்டமாக பறப்பதை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் ஆங்கில 'V'வடிவில் பறப்பதை காணலாம்.. அது ஏன் அவ்வாறு பறக்கின்றன.. அவ்வாறு 'V' வடிவில் பறப்பதால் அவை ஆற்றலை சேமிக்கின்றன..தனியாக பறக்கும் பறவை காற்றால் பின்னுக்கு இழுக்கப்படும் விசையிலிருந்து, இவ்வாறு கூட்டமாக 'V' வடிவில் பறக்கும் போது அது தடுக்கப்படுகிறது... இதனால் அவற்றால் வெகு தொலைவுக்கும், இலகுவாகவும் பறக்க முடிகிறது.. மேலும் சக பறவைகளை எந்த நிலையிலும் பார்க்க முடிவதால் பாதுகாப்பாகவும் பின்தொடர முடிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.