முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயற்கை பூமி எங்கிருக்கு தெரியுமா..

சூரிய மண்டலம் தொடங்கி பால்வெளி பாதை வழியாக பிரபஞ்சம் முழுவதும் பயணித்தால்.. அப்படி மனிதனால் பயணிக்க இயலாது.. ஒரு வேளை பயணித்தால்.. பூமியைப் போன்ற நீரும், ஜீவராசிகளும் வசிக்கும் இன்னொரு பூமியை கண்டுபிடிக்க முடியுமா.. முடியவே முடியாது.. இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரு உயிர்க்கோளமான பூமி மட்டும்தான்...ஆனாலும் விஞ்ஞானத்தின் தேடல் தீராது.. அது கிடக்கட்டும்..அப்படியானால் பூமி போல செயற்கை பூமி செய்ய முடியுமா.. அது போன்ற ஒன்று இருக்கிறதா... என்றால் ஆம் அல்லது இல்லை... ஆம் என்ற பதில் மூலமாக நாம் அமெரிக்காவுக்கு சென்றால் அங்குதான் செயற்கை பூமி உள்ளது.. இன்றைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மாசுபட்டு கிடக்கும் பூமிக்கு மாற்றாக.. எந்த வித செயற்கையும் இன்றி இயற்கையாக இருக்கும் வகையில் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தின் டஸ்கர் என்ற நகரிலிருந்து 64 கிமீ தொலைவில்தான் அது அமைக்கப்பட்டுள்ளது. ஆரக்கிள் என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறிய செயற்கை பூமி கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பூமி தோன்றிய போது எப்படி இருந்ததோ அதே போன்று தூய்மையாக....உயரிய தொழில் நுட்ப செயற்கை கண்ணாடி தடுப்பு சுவர்களுக்குள் 3.4 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிகாற்று உள்ளே செல்லவோ, உள்ளிருக்கும் காற்று வெளியே வரவோ இயலாது. அங்கே, மழைக்காடுகள், பவளப்பாறைகள், வெப்ப மண்டல மரங்கள்,  உயிரினங்கள் என அனைத்தும் மிகவும் சுதந்திரமாக திரிகின்றன. அதற்கு இடையூறு இன்றி அவை விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்படுகின்றன.. என்ன கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

ஸ்மார்ட் ஸ்கார்ஃப்

காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஸ்மார்ட் ஸ்கார்ஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. வையர் என்ற இந்த ஸ்கார்ஃப், மொபைல் ஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.  நாம் வெளியே வரும்போது, காற்றின் மாசு எவ்வளவு, ஸ்கார்ஃப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் தனது அப்ளிகேஷன் மூலம் வழிகாட்டுகிறது.

விண்வெளியில் பயிர்செய்த மிளகாயை சுவைத்த நாசா விண்வெளி வீரர்கள்

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவை கொண்டு செல்வதற்கு அதிக சக்தியும் நீண்ட காலமும் தேவைப்படுகிறது. குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு பேக் செய்யப்பட்ட உணவை கொண்டு செல்லும் போது அது கெட்டு போய் விடுகிறது. உணவின் தரம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் கே போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நாசா கூறியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.தற்போது விண்வெளியில் மிளகாயை பயிரிட்டு அறுவடை செய்ததன் மூலம் வைட்டமின் சி தேவையை பெறுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக இது உள்ளது. இதற்காக நாசாவைச் சேர்ந்த ஒரு குழு கென்னடி விண்வெளி மையத்தில் வேலை செய்தது. இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இந்த சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின.மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின. தற்போது அவற்றை நாசா விண்வெளி வீரர்கள் சுவைத்துள்ளனர். மேலும் பூமியில் விளைந்த மற்றும் விண்வெளியில் விளைந்த மிளகாய்களுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய்வதற்காக அவற்றை பூமிக்கு கொண்டு வரவும் நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனிதர்கள் குடியேறும் முயற்சியில் நாசாவின் இந்த சாதனை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

அம்பானி வீட்டில் 180 ஆண்டுகள் பழமையான 2 மரங்கள் : விலை ரூ.84 லட்சம்

180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இந்த 2 அரிய வகை ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea.3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்து விட்ட போதிலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.84 லட்சம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேள்விகுறியான மனிதர்களின் எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் வருகிற 2035-ம் ஆண்டிற்குள் மனிதர்களில் பாதி பேர் அலுவலகங்களில் வேலை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.பி.எம். நிறுவனம் மனிதர்களைப்போல செயற்கை அறிவாற்றல் திறன் பெற்ற ரோபட்டுகளை உருவாக்கியுள்ளது. இந்த ரோபட்டுகள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவை, மருத்துவக் காப்பீடுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை கணக்கிட்டு மின்னல் வேகத்தில் தெரிவிக்கிறது. இந்த செயற்கை அறிவாற்றல் ரோபட்டுகள் மூலமாக  புகுகோகு என்ற மருத்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் பாதி ஊழியர்களின் வேலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!