முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாதுகாப்பது அவசியம்

சிறுத்தை இனம் அழிந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 7,100 சிறுத்தைகள் உள்ளன. இவை வாழ்வதற்கு ஏற்ப தேவையான இடங்களோ, சரணாலயங்களோ இல்லை. இதனால் அவைகள் காடுகளை விட்டு வெளியே வரும் சூழ்நிலையில் மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலேயே அதன் இனம் அழிய காரணமாக இருக்கிறது.

சிந்திய காபியில் சித்திரம் தீட்டி அசத்தும் இத்தாலிய இளைஞர்

எதையும் கலைக் கண்ணோடு அணுகி அதையும் தனது தனித்தன்மையாக மாற்றிக் கொள்ளக் கூடிய வல்லவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் இத்தாலியில் உள்ள Mantua என்ற இடத்தைச் சேர்ந்தவரான Giulia Bernardelli என்ற 34 வயது இளைஞர். ஓவிய நுண்கலைப் பிரிவில் பட்டதாரியான இவருக்கு, அழகிய சித்திரங்களை தீட்ட மற்றவர்களை போல வண்ண வண்ண நீர் வண்ணங்களோ, பெயிண்டோ, பேஸ்டலோ, பிரஷ்ஷோ தேவையில்லை, ஜஸ்ட் தரையில் சிந்திய காபியும் ஸ்பூனும் இருந்தால் போதும்.. அசத்தலான ஓவியங்களை தீட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார். இவரது காபி ஓவியங்களை ஆர்வலர்கள் உலகம் முழுதும் கொண்டாடி பரப்பி வருகின்றனர். கண்ணை கவரும் வகையில் இவர் வரைந்துள்ள ரயில் நிலையம், யானை, மிகப் பெரிய கோட்டை, அழகிய மனித முகங்கள் ஆகியன காண்பவரை கவர்ந்திழுக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. ஓவியம் வரைவது ஓரு கலை என்றால் சிந்திய காபியில் சிதறாமல் அதை சித்திரமாக்குவது புதுக்கலை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சூடான பாலை குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் வருவது ஏன்?

இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நன்றாக தூக்கம் வருவது ஏன் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் நாடுகளில் நீண்ட காலமாகவே இரவு உறக்கத்துக்கு முன்பு சூடாக ஒரு டம்பளர் பால் குடிப்பது வழக்கம். தற்போது மேலை நாடுகளிலும் இரவில் நன்றாக உறங்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகளை பொதுவாக டிரிப்டோபன் என குறிப்பிடுகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்  கேசீன் ட்ரிப்டிக் ஹைட்ரோலைசேட் (சிடிஎச்) எனப்படும் பெப்டைட்டுகளின் கலவையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கு அளிக்கப்படும் பென்சோடியாசெபைன்கள், சோல்பிடெம் போன்றவை கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துபவன. ஆனால் பசுவின் பாலில் கிடைக்கும் கேசீன் எனப்படும் புரதம் செரிமானத்தை மேம்படுத்தி சிடிஎச் எனப்படும் தூக்கத்தை மேம்படுத்தும் பெப்டைட்களின் கலவையை கொண்டிருப்பதால் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக் கூடியது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாசா திட்டம்

பூமியின் வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் குறைந்த அளவில் கார் பன்டை ஆக்சைடு உள்ளிட்டவைகள் உள்ளன. ஆனால் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு உள்ளது. எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்பும் போது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமான டைப்பிங்கிற்கு....

கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J  கீ-யின் கீழே ஒரு கோடு இருக்கும். கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich). கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. காரணம், கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும். 2002-ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் இது மாதிரி எந்த ஒரு கோடும் இருந்ததில்லை.

முதல் சினிமா

இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது.   தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது.  தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago