முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா?

நம்மில் பெரும்பாலோனோர் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்்ந்த சுதந்திர போராட்ட தியாகி பிங்கலி வெங்கய்யா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தேசிய கொடியின் அடிப்படையை உருவாக்கி காந்தியிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தேசிய கொடியை வடிவமைத்தவர்கள் பக்ரூதீன்தியாப்ஜியும் அவரது மனைவி சுரேயாவும் தான். இதற்கான பொறுப்பை நேரு, பக்ரூதீனிடம் அளித்தார். இந்த குழுவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். மூவர்ண கொடியையும் அதன் மத்தியில் அசோக சக்கரத்தையும் அவர்கள்தான் வடிவமைத்தனர். தேசிய கொடிக்கு ஏற்ற வண்ணத்தை நெய்து கொடுத்தவர் சுரேயா. 1947 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இவர்கள் நேருவிடம் அளித்த கொடி அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பூமி சூரியனை சுற்றும் நாள்களை பண்டைய காலத்தில் கணக்கிட்டவர் யார் தெரியுமா?

இன்றைய நவீன அறிவியல்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நவீன அறிவியலுக்கு முன்பே இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும், ஞானிகளும் இதை முறையாக கூறியதுடன், அதை கணக்கிட்டும் கூறியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் பாஸ்கர ஆச்சார்யா. கணிதவியல் அறிஞராகவும், வானியல் அறிஞராகவும் திகழ்ந்த அவர் நவீன அறியவியலுக்கு முன்பாகவே பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை துல்லியமாக கணித்து சொன்னவர்.  அன்றைக்கு அவரது கணக்கீட்டின் படி, 365.258756484 நாட்கள் என தெரியவந்தது. நவீன அறிவியலில் அது 365.2564 நாள்கள் என கணக்கிடப்பட்டது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 0.0002 சதவீதம் மட்டுமே என்பது ஆச்சரியம் தானே.

அன்னை தெரசா அணிந்திருந்த சேலைக்கு அறிவுசார் சொத்துரிமை உள்ளது தெரியுமா?

அல்பேனியாவில் பிறந்து கிறிஸ்துவத்தை பின்பற்றிய அன்னை தெரசா கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை தொடங்கி ஏழைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறமும், ஓரத்தில் 3 நீல நிற கரையும் கொண்ட சேலை அவரது அடையாளமாகவே மாறின. பின்னர் அவரை பின்பற்றி அந்த சாரிட்டியில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரிகளும் அந்த புடவையையே சீருடையாக ஏற்று அணிந்து வருகின்றனர். இந்த தனித்தன்மை வாய்ந்த  புடவையின் டிசைனை அன்னை தெரசா தான் உருவாக்கினார். தற்போது அதற்கு அறிவுசார் சொத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என அந்த அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. லாப நோக்கம் அற்ற பொது சேவைகளுக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டில் முதன்முறையாக புகைப்படம் ஒட்டும் முறை எப்போது வந்தது தெரியுமா?

பாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? பாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது. ஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும். பாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது. இது 1915 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் மிகவும் சிக்கலான உணவு எது தெரியுமா?

இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் வாய்ந்த தேசமாகும். பல்வேறு மதங்களும், பல்வேறு உணவு வகைகளும் கொண்ட கலர்புல் நாடு. ஒரு புறம் விதவிதமான காய்கறி உணவு என்றால் மறுபுறம், ஆடு, மாடு, கோழி, நாய் என விதவிதமா ன இறைச்சி உணவுகளும் உள்ளன. அவற்றில் சில சிக்கலான உணவுகளும் உண்டு. பட்டு புழுவிலிருந்து நூல் எடுத்து பட்டு புடவை தயாரித்தால் நாம் விரும்புவோம். ஆனால் அதன் புழுக்கள் அடையும் பியூபாவை எடுத்து வறுவல் செய்தால்.. உவ்வே என்போம். ஆனால் அசாமில் உள்ள ஹோட்டலுக்கு சென்று எரி போலு என்று கேட்டால் கொண்டு வந்து கொடுக்கும் உணவை என்ன ஏது என்று கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா... எரி போலு என்பது பட்டு புழுக்களின் பியூபாவால் செய்யப்பட்ட சுவையான உணவாகும். இது இவர்களின் வழக்கமான உணவு. அது மட்டுமின்றி மூங்கில் குருத்துகளின் புளிப்பிலிருந்து இவை தயாரிக்கப்படுகின்றன. 

அமெரிக்காவில் எப்போது முதன்முதலாக இந்திய உணவகம் தொடங்கப்பட்டது

உலக அளவில் இந்திய உணவு வகைகள் மக்களால் விரும்பப்படும் உணவு வகைகளின் டாப் 10 பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. தோராயமாக 24 நாடுகளில் உள்ள மக்களில் 62 சதவீதம் பேர் இந்திய உணவை விரும்புகின்றனர். அதற்கு காரணம் இந்திய உணவு வகைகளில் காணப்படும் பல்வேறு வகையான ரகங்களும், அவற்றில் சேர்க்கப்படும் அரிதான மசாலா மற்றும் மூலிகை பொருள்களும் உலக மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இந்திய உணவகம் 1960களின் மத்தியில் தொடங்கப்பட்டது. பாம்பே மசாலா என்ற உணவகம் தான் பரவலாக கவனம் பெற்றது. தற்போது அமெரிக்காவில் சுமார் 80 ஆயிரம் இந்திய உணவகங்கள் உள்ளன. நியூயார்க் நகரில் தான் அதிக இந்திய உணவகங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக   சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ளன.