முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொடராக வந்த டால்ஸ்டாயின் நாவல் பாதியில் நிறுத்தப்பட்டது ஏன் தெரியுமா?

உலக புகழ் பெற்ற நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய். அவரது போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற நாவல்கள் உலக புகழ் பெற்றவை. அவரது மிக சிறந்த நாவலான அன்னா கரீனா 800க்கும் அதிகமான பக்கங்களை கொண்டவையாகும். அந்த நாவல் தொடக்கத்தில் ரஷ்யன் மெசஞ்சர் என்ற இதழில் தொடர் கதையாகவே வந்தது. அவரது அரசியல் கருத்துகளுடன் பத்திரிக்கை ஆசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அது முழு வடிவில் புத்தகமாக வெளிவந்தது.

கல்லீரல் பாதிப்பு

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடுமாம். உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் பித்தநீர் பை அமைந்திருக்கும். கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கல்லீரல் பாதிப்பை தடுக்க கீரை, பூண்டை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

நீல நிற கண்களை கொண்டவர்கள்

மனித குலத்தில் ஒரு காலத்தில் அனைவரும் அடர் பழுப்பு நிற கண்களை உடையவர்களாகவே இருந்தனர். பின்னர் சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நீல நிற அதாவது பூனை கண் தோற்றமுடைய மனிதர்கள் தோன்றினர். அண்மையில் டேனிஷ் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில், ஸ்காண்டிநேவியா, துருக்கி, ஜோர்டான், இந்தியா போன்ற பகுதிகளில் உள்ள நீல நிற கண்களை உடைய மனிதர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என கண்டறிந்துள்ளார். அதுவே மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி நீல நிற கண்களை உருவாக்கியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

குச்சி ஐஸை கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் ஒருகட்டத்தில், அவற்றை அங்கேயே மறந்து விட்டு, தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த போது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. அதை சுவைத்து பார்த்த அவன் அதன் சுவையில் மயங்கிப் போனான். தொடர்ந்து சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன். பின்னர் அதற்கு உரிய காப்புரிமை பெற்று ஒரு ஐஸ் கம்பெனியை தொடங்கினான். அன்றைக்கு அங்கு தொடங்கிய குச்சி ஐஸ் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்து வருகிறது.

ஈஸ்டர் தீவில் அணிவகுத்து நிற்கும் மோவாய் சிற்பங்கள்

உலகம் முழுவதும் வரலாற்றில் கண்டறிய முடியாத ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய் சிற்பங்கள். இவை கிபி 1250 முதல் 1500 கால கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ராபா நூய் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த கல் சிற்பங்கள் சுமார் 10 மீ உயரம் கொண்டவை. சுமார் 900 சிலைகள் அணிவகுப்பாக அங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை எதற்காக நிறுவப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது. அதே போல, இத்தனை பெரிய சிலைகளை அக்காலத்தில் எவ்வாறு அந்த மக்கள் கொண்டு வந்து நிறுவினர் என்பதும் இன்று வரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்றாகவே உள்ளது.

முதன் முதலில் எடுத்த புகைப்படத்தை புரொசஸ் செய்ய எவ்வளவு நேரமானது தெரியுமா?

Nicéphore Niépce என்பவர் எடுத்த புகைப்படம் தான் உலகின் முதல் புகைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவர் எடுத்து அதை புரொசஸ் செய்வதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடித்துள்ளது. அப்போதைய கையால் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள் காரணமாக இத்தனை மணி நேரமானது. மேலும் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கும் நீண்ட நேரமானது. எனவேதான் பண்டைய காலங்களில் புகைப்படத்துக்கு நீண்ட நேரம் போஸ் கொடுக்க வேண்டியிருந்ததால், பெரும்பாலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் சிரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் அசையாமல் இருக்க வேண்டும் அல்லவா. அது சரி முதலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துக்கு என்ன டைட்டில் தெரியுமா  "லே கிராஸில் ஜன்னல் வழி தெரியும் காட்சி" என்பதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்