முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிளம்பருக்கு அடித்த ஜாக்பாட்

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் திருப்புமுனை எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிளம்பர் வேலை செய்து வரும் Justin Cauley என்பவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் அண்மையில் அங்குள்ள சர்ச் ஒன்றில் பாத்ரூமில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுவரை தோண்டும் போது சுண்ணாம்பு காரை கொட்டுவதற்கு பதிலாக பணம் கொட்டியது. அத்தனையும் அசல் டாலர்கள். உடனே சுவரை உடைத்து பார்த்தில் இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நேர்மையாக சிந்தித்த அவர் அந்த பணத்தை தான் எடுத்துக் கொள்ள விரும்பாமல் போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அங்கு 2014 இல் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது அடிக்கப்பட்ட பணம் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்டுபிடித்த பிளம்பருக்கு ரூ.3 லட்சம் சன்மானம் அளித்து பாராட்டப்பட்டார். இந்த செய்தி பரவி பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், மேலும் ஒரு ஜாக்பாட்டாக சர்ச் நிர்வாகம் அவருக்கு ரூ.15 லட்சம் பரிசளித்து அசத்தியுள்ளது.

தகவல் தவறு

உயிரிழந்துபோன பயனாளர்களின் நினைவுகளை பகிர்ந்து மரியாதையை செலுத்துங்கள் என அவர்களது சக நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலிருந்து தவறுதலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இறப்புப் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் பெயரும் இருந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.

ஏலக்காய் மகிமை

தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்ய வல்லதும், ஜலதோஷத்தை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காய். இது, நுரையீரலை செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறுகளை போக்கி ஜீரண உறுப்புகளை முறையாக செயல்பட வைக்கிறது. இதய ஓட்டத்தை சீராக்குகிறது. சிறுநீரை பெருக்குகிறது. ஏலக்காயை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, தலைவலி, குமட்டலை சரிசெய்யலாம்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சில சிறப்பு அம்சங்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று. 

கோல்டன் பிஷ்

லிவர்பூல், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. ஆக்ஸிஜன் இல்லையென்றால் இறந்துவிடும். ஆனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலும் மீன்கள் உயிர் வாழும் திறன் உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அவை ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றனவாம். தங்கமீன்கள் குளிர்காலங்களில் உறைந்த ஏரிகளுக்கு கீழே இருக்கும்போது அந்த சூழலை எதிர்கொள்ள ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன.

பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்திய வகை டால்பின்

அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்